வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், ‘ எடப்பாடி ஆட்சிக்கு மோடி முட்டுக்கொடுத்து வைத்துள்ளார். அதிமுக பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். எடப்பாடி ஒரு உதவாக்கரை, மோடி ஒரு சர்வாதிகாரி’ என்றார்.
'எடப்பாடி ஒரு உதவாக்கரை, மோடி ஒரு சர்வாதிகாரி' - வெளுத்து வாங்கிய ஸ்டாலின் - பிரச்சாரம்
சென்னை: வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஸ்டாலின், ஹீரோவான ராகுலை பார்த்து, மோடி ஜீரோ ஆகியுள்ளார் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘மோடி இந்தியப் பிரதமர் அல்ல வெளிநாட்டுப் பிரதமர். ஹீரோவான ராகுலைப் பார்த்து மோடி ஜீரோ ஆகியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து பலர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடி மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவில்லை. கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் உள்ளே வந்துவிட்டது. அனிதா உயிரிழப்பு போன்ற கொடுமைகளை நிகழ்த்தியது அதிமுக. நீட் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் ஏமாற்று வேலை” என்றார்.