மும்மொழிக் கொள்கை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு! - செங்கோட்டையன் - அமைச்சர் செங்கோட்டையன்.
சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து ஓரிரு நாளில் முதலமைச்சர் தன் முடிவை அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய சில முக்கிய தகவல்கள்;
- இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கல்வி பாடத்திட்டத்தை க்யூ ஆர் கோட் இணைத்து வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் பாடத்திட்டத்தை மாணவர்கள் மடிக்கணினியிலே பயன்படுத்திக் கொள்ளலாம்.
- மாணவர்கள் ஓரிரு இடங்களில் போராட்டம் நடத்தி வருவது வேதனையளிக்கிறது. அம்மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவெடுத்துள்ளோம். அதனை அவர்கள் நினைவுகூர்ந்து மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
- காஞ்சிபுரத்தில் வரும் ஒன்றாம் தேதி தொடங்கி 40 நாள்களுக்கு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கவுள்ளதால் நகரில் படிக்கும் மாணவர்கள் எட்டரை மணி முதல் ஒன்றரை மணிவரை படித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.
- தண்ணீர் தேவையைக் காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுப்பளிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
- ஸ்மார்ட் அட்டை தற்போது 11 லட்ச மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் காடுகள் வழங்கப்பட்டுவிடும்.
- 102 கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டிடங்கள், கழிப்பறை, சுற்றுச் சுவர்கள், ஆய்வுக் கூடங்கள் என்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
- புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர், நாளை மறுநாளுக்குள் பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
- தனியார்ப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- சி.பி.எஸ்.இ க்கு இணையான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தின் கோப்பு முதல்வரிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதில் மொழிப் பாடம் இருக்கும்.