2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடளுமன்றத்தில் வாக்களித்தன. அதேவேளையில், இது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இட ஒதுக்கீட்டின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது என்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சியினர்(காங்கிரஸ் தவிர) இதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர். ஆளும் அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், உறுதியான நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், 10% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.