சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில்,
“கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானை பொதுமக்களின் செல்லப்பிள்ளையாக மாறி உள்ளது.
ஆகவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அந்த யானையை கும்கியால் தொந்தரவு செய்யாமல் அரசு போதிய பாதுகாப்பு அளித்து பாதுகாப்பான முறையில் மீண்டும் வனப்பகுதிக்குள் பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல்அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
நியாய விலைக்கடை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசே உடனே தலையிட்டு, பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்குவதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.