அந்த மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளதாவது, "மத்திய அரசு ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்.
2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்மாநிலத்துக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 26.8 கோடி, இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 25% ஆகும்.
இப்படி இடம்பெயர்ந்தவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் (நியாயவிலைக் கடை) மூலம் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த இன்னல்களை சந்திக்கின்றனர். குறைந்த ஊதியத்தையே பெறும் இடம்பெயர்ந்த மக்கள் உணவு தானியங்களை வெளிச்சந்தையிலே வாங்கும் நிலை உள்ளது.
இது அவர்களை இரட்டிப்புச் சுமையில் தள்ளுகிறது. அதனால் இந்த ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டம் என்பது பிற்போக்கானது. அதே நேரத்தில் இந்தத் திட்டம் மாநில அரசுக்கு நிதிச்சுமையை அதிகப்படுத்தும்.
வட இந்தியாவிலிருந்து தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். தமிழ்நாட்டில் யுனிவர்சல் பி.டி.எஸ். (Universal PDS) திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதனால் இந்த ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அதனால்தான் நாங்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம்.
இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநில வாரியாகக் கணக்கெடுக்கவும், அவர்களுக்கான கூடுதல் நியாயவிலைக் கடை பொருட்களை வழங்குவதற்கும் மத்திய அரசு முன்வந்தால் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும். இந்தப் பரிந்துரையைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.