தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சைக்கிள் சின்னம்' ஒதுக்கீடு; தேர்தல் ஆணையத்தின் முடிவை தெரிவிக்க உத்தரவு! - seeking cycle symbol for those party

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை 18ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சைக்கிள் சின்னம் தாமக

By

Published : Jul 3, 2019, 11:38 PM IST

Updated : Jul 4, 2019, 9:20 AM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், கடந்த 1996ஆம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரால் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு “சைக்கிள் சின்னம்” ஒதுக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு சைக்கிள் சின்னத்தை பொது சின்னத்திலிருந்து நீக்கி இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்குவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2002இல் இந்தியத் தேசிய காங்கிரஸில் இணைந்து 2014 ம் ஆண்டு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகும் வரை தனியாக எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. அதனால் தமிழகத்தில் வாக்கு சதவிகிதத்தை இழக்கவில்லை.

இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி, போதுமான இடங்களில் போட்டியிடாத நிலையில், தேர்தல் சின்னம் சட்டப்பிரிவு '10பி' ன் படி மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிட முழு உரிமை உள்ளது.

அதனால், சைக்கிள் சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ்( மூப்பனார்) கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி வேறு கட்சியுடன் இணைந்து பின்னர் மீண்டும் உதயமானால், அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட பழைய சின்னத்தைப் பெற உரிமை உள்ளதா? எனத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன், தேர்தல் ஆணையம் தங்கள் மனு மீது இன்னும் பதிலளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். விசாரணைக்கு பின்னர் வரும் 18ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Last Updated : Jul 4, 2019, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details