சேலம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். தற்போது சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. குண்டு மாம்பழம் , அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரம், நடுசாலை, இமாம்சந்த் என்று 60க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டு பழ அங்காடிகளில் விற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விற்பனையாகும் சேலத்து மாம்பழம்! - salem-mango-in-online-
சேலம்: உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழம் ஆன்லைன் மூலம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக மாம்பழ வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாம்பழமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு இனிப்புச் சுவையை வழங்குவதால் மாம்பழ பிரியர்கள், சீசன் காலங்களில் தினமும் மாம்பழம் உண்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலநாள் எப்போதும் மாம்பழம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாது , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை , திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாம்பழங்கள் விளைகின்றன.
இதுகுறித்து மாம்பழ வணிகர் சீனிவாசன் கூறுகையில், " வாடிக்கையாளர்கள் நேரில் வந்து வாங்குவதைவிட ஆன்-லைன் மூலம் மாம்பழங்களை வாங்குவதில் தற்போது ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் இரண்டு டன் அளவிற்கு ஆன்லைன் மூலம் நாங்கள் மாம்பழ விற்பனை செய்துவருகிறோம். இந்தியாவின் எந்த நகரத்திற்கும் எங்களால் மாம்பழத்தை அனுப்பி வைக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள், அதிகம் ஆன்லைனில் வாங்குகிறார்கள்" என்று தெரிவித்தார்.