தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு முயலக் கூடாது..!' - ராமதாஸ் - நீதிபதி நியமனம், கீழமை, நீதிமன்றம், பா.ம.க, ராமதாஸ்

சென்னை: "இந்திய ஆட்சி, காவல் பணிகளைப் போன்று இந்திய நீதித்துறை பணி என்ற புதிய பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ramdoss

By

Published : Jun 29, 2019, 11:23 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தி நீதிபதிகளைத் தேர்வு செய்வதும், அவர்களை இந்தியாவின் எந்த பகுதியிலும் நியமிக்க வகை செய்வதும் தான் மத்திய அரசின் நோக்கமாகும். இதுகுறித்து மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்பதற்காக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களுக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் முனைவர். ஆலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த ஜூன் 19-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்று தேசிய நீதித்துறை பணியாளர் தேர்வாணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் புதுமையானது அல்ல. புதியதும் அல்ல. ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

மத்திய அரசு அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வரும் ஒற்றைக் கலாச்சாரத்தை நீதித்துறையிலும் திணிக்க விரும்புவதன் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். நீதிபதி பணிக்குத் தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். மாநிலத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியாத வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டால், நீதி வழங்கும் முறையே சிதைக்கப்பட்டு விடும். இது எனது ஐயம் மட்டுமல்ல.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதித்துறையில் உச்சநீதிமன்றம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் பொதுப்பட்டியலில் தான் உள்ளன. கீழமை நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கினாலும் கூட, நீதிமன்றங்களை நிர்வகிப்பது, கீழமை நீதிபதிகளை நியமிப்பது ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க முயலக் கூடாது. இதற்கு முன் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் தான் பெரும் சீரழிவைச் சந்தித்தது. நீதித்துறைக்கும் அதே போன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது.

தேசிய அளவில் கீழமை நீதிபதிகளைத் தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் என்பதால் இந்தத் திட்டத்தை ஏற்க இயலாது என்று தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும் மத்திய அரசுக்குக் கருத்து தெரிவிக்க வேண்டும்’ எனத் குறிப்பிட்டிருக்கிறார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details