2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழக கட்சித் தலைவர் 493 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜனிடம் தோல்வியடைந்துள்ளார்.
இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏ சுந்தர்ராஜனின் வெற்றியில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதால் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கட்சித் தாவல் காரணமாக சுந்தர்ராஜனை சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்தார். இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து ஒட்டப்பிடாரம் காலியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து கிருஷ்ணசாமி இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தார். இதில், தேர்தல் விதிக்கு உட்பட்டு தேர்தலை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது, ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலுக்கான தடை நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.