இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், ”2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ போட்டித் தேர்வுகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களை திறம்படத் தயார் செய்யும் வகையில், ஓராண்டு பயிற்சியை புனேவில் உள்ள தக்ஷன் நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தக்ஷனா நிறுவனம் விதித்துள்ளது.
அந்த விதிமுறைகள் பின்வருமாறு:
1. 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
2. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
3. புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் தங்கிப் பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் .
4. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து விருப்பக் கடிதத்தை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டும்.
5. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் அந்த உத்தரவில், “ உணவு, விடுதி வசதி, பயிற்சிக் கட்டணம் அனைத்தும் இலவசமாக அந்த நிறுவனத்தால் வழங்கப்படும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதி தக்ஷன் நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.”, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய நீட் பயிற்சியில் மாணவர்கள் பெரிய அளவில் சேரவில்லை. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 583 மாணவர்கள் தகுதி பெற்றாலும், ஒரு மாணவர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முறையில் நீட் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.