தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, "2016ஆம் ஆண்டு முதல் இணைப்புப் பெறாமல் செயல்பட்டுவந்த கல்லூரிகளைக் கண்டறிந்து, ஆவணங்களைச் சரிபார்த்து ஒற்றைச்சாளர முறையில் இணைப்பு ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டில் அனைத்து கல்லூரிகளும் இணைப்பு ஆணை பெற்றுச் செயல்பட்டுவருகின்றன” என்றார்.
மேலும், மருத்துவ மேற்படிப்பிலிருந்த சிக்கல்கள் குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு,
ரஷ்யா, சீனா போன்ற வெளிநாட்டிற்குச் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் முதுகலைப் பட்டப்படிப்பினை படிக்கத் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்றார். முதுகலை மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 80 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதைக் குறைக்கக் கோரியும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக விடுமுறை நாட்களிலும் செயல்பட்டு 20 ஆயிரம் ரூபாயாக அந்தக் கட்டணத்தைக் குறைத்ததாக சுட்டிக் காட்டிய அவர், இதனால் அதிக அளவில் மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க முடியும் என்றார். மாணவர்கள் பயன்பாட்டிற்காக இதனைச் செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முப்பரிமாண முறையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக நாம் கேள்வி கேட்டபோது, ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முக்கியமான உடல் உறுப்புகளான இருதய வால்வு போன்றவற்றை முப்பரிமாண முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
ஒருவருக்கு ரத்த நாளம் அடைபட்டால் அதற்குப் பதில் முப்பரிமாணம் மூலம் ரத்த நாளத்தை டிஜிட்டல் முறையை பயன்படுத்தி நகலெடுத்துப் பொருத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் உபயோகப்படுத்தி நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சுதா சேஷையன் விளக்கினார்.
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன் சிறப்புப் பேட்டி மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் மூலிகைகள் அடங்கிய தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் சிறிய மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.