தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கி.வீரமணி வரவேற்பு

சென்னை: நீட் தேர்வு ரத்து, மாநிலப் பட்டியலில் கல்வி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Veeramani

By

Published : Apr 3, 2019, 7:29 PM IST

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வை பொறுத்தவரையில் திராவிடர் கழகம் தொடக்கம் முதலே தனது எதிர்ப்பை பல வடிவங்களிலும் வெளிப்படுத்தியுள்ளது. திமுக, இடதுசாரிகள் - பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமனதாக இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இருப்பினும், இந்திய அரசயமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சமூகநீதி என்பது ஆளும் அதிகார வர்க்க உயர்ஜாதி பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது. அதன் விளைவுதான் அரியலூர் அனிதா, பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீக்களின் தற்கொலைகள். திருத்துறைப்பூண்டி கிருஷ்ணன், சிங்கம்புணரி கண்ணன் ஆகிய தந்தையார் மரணங்களும் ஆகும்.

நீட் தேர்வு எழுதிய 75,000 தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் வெறும் 300 மட்டுமே. ஆனால், சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்கள் 9,000 பேர் எழுதியதில், 4500 மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது.ஏனெனில், நீட் தேர்வு கேள்வி என்பது சிபிஎஸ்இ கல்வி அடிப்படையில்தான் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை நன்கு அறியலாம்.

இந்த நிலையில், வராது வந்த மாமணிபோல, இருட்காட்டில் ஒளிவெள்ளம் பாய்ந்ததுபோல, நம்பிக்கை நட்சத்திரமாககாங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விரும்பாத மாநிலங்களில் தேர்வு இருக்காது என்ற உத்தரவாதத்தினை அளித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் இந்த அரும்பெரும் அறிவிப்புக்காக சமுகநீதிச் சிந்தனைக்காக கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றியறிதலோடு கூடிய பாராட்டினை பலபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதோடு, நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைக்குக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பச்சைக் கொடி காட்டியது மேலும் பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும். இதன்மூலம் மாநில உரிமையை மதிக்கும் உணர்வைக் காங்கிரஸ் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை அமைக்கச் செய்வதை மக்கள் உறுதிபடுத்த வேண்டும். இக்கூட்டணி வெற்றிக்காக பாடுபட உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details