தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடு விவாதம்; ஆ ராசாவுக்கு, வீரமணி புகழாரம்! - kee veeramani statement

சென்னை: 10 விழுக்காடு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்ததிற்கு எதிராக மக்களவைத் திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசிய விதம் பாராட்டத்தக்கது என்று கி. வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

kee-veeramani

By

Published : Jul 2, 2019, 11:59 PM IST

இது குறித்து திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றத்தின் மக்களவையில், 10 விழுக்காடு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதிக்காரர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் சென்ற நாடாளுமன்றத்தில், அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த கதை பற்றியெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை கொறடாவும், மேனாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா அவர்களது உரை ஒரு அற்புதமான - சமூகநீதி வரலாற்றை - பல நூற்றாண்டு வரலாற்றை (Putting Centuries into a Capsules) ஒரு சிறு மாத்திரைக்குள் அடக்கியதுபோல், ஆதாரப்பூர்வ விளக்கம் அளித்த உரையும், முடித்த முறையும் மிகவும் பாராட்டத்தக்கது.

மத்தியில் மோடி அவர்கள் தலைமையில் பெருத்த பலத்துடன் ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இவர்கள் 38 பேர் (புதுவை உள்பட) வெற்றி பெற்றுச் சென்று என்ன பயன்? என்று புரியாமலோ அல்லது வேண்டுமென்றோ கேட்டவர்களின் வாதங்களைக் கிழித்தெறிவதுபோல், நாடாளுமன்றத்தில் பதவியேற்பில் ‘தமிழ் வாழ்க’, ‘பெரியார் வாழ்க’வெனத் தொடங்கி, ஒவ்வொரு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் சரியான எதிர்க்கட்சியாக, ஆளும் பெருத்த கட்சியைத் திகைக்க வைக்கும் வகையில், இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு, ‘நீட்’ தேர்வு விலக்கு, வறட்சி, அய்ட்ரோ கார்பன் திட்டத் திணிப்பு போன்ற பல அநீதிகளை விளக்கி, தங்களது அறிவார்ந்த வாதங்கள்மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு திருப்பத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இமை தூங்கா ஜனநாயகக் காவலர்களாக இரு அவைகளிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள் முத்திரை பதித்து வருகின்றனர்!

10 சதவிகித (கூடுதல்) இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு என்பது சமூகநீதி தத்துவத்தின் வேரில் வெந்நீர் ஊற்றுவதே! தோழர் ஆ.இராசா அவர்கள் சுட்டிக்காட்டிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு போட்ட நாடாளுமன்ற சின்கா குழு, ஏழைகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவலாமே தவிர, இட ஒதுக்கீடு, கல்வி, உத்தியோகத்தில் (அவர்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குமேல் ஏற்கெனவே இருப்பதால்) அவர்களுக்குத் தர முடியாது. இட ஒதுக்கீடு சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி (மலைவாழ்) மக்களுக்கு மட்டுமே எனப் பரிந்துரைத்தது!

இன்று (2.7.2019) வெளிவந்துள்ள ஆங்கில ‘இந்து’ நாளேட்டில், அனிஷ்குப்தா, ஆலேயகிரி என்ற இரு டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்,‘‘மத்திய பல்கலைக் கழகங்களில் போதிக்கும் கல்விப் பேராசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு அவசரச் சட்டம் - நேற்று மக்களவையில் நிறைவேறியுள்ளது. மத்திய பல்கலைக் கழகங்களில் (மொத்தம் 41) பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய ஒதுக்கீடு, எஸ்.சி., எஸ்.டி., கான பேராசிரியர்கள் ஒதுக்கீடு 13 பல்கலைக் கழகங்களில், 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. ஆனால், முன்னேறிய சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குக் கூடுதல் இடங்கள், கூடுதல் நிதி உதவி எல்லாம் விரைந்து தாராளமாக, ஏராளமாக வேக வேகமாக வாரி இறைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓ.பி.சி., பிற்படுத்தப்பட்டோருக்கு 27% என்பதை நிரப்பாமல், வெறும் 9.8% தான் நிரப்பப்பட்டுள்ளது. மேல் பதவிகளிலேயோ வெறும் 1.22%, 1.44% தான், துணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் பதவிகளில் ஒதுக்கீடு’’ என்று குறிப்பிட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் 8,000 பதவிகள் நிரப்பப்படுகின்றன. 770 கோடி ரூபாய் உயர்சாதி 10 சதவிகித கூடுதல் இடங்களுக்கான நிதி ஒதுக்கீடு. எவ்வளவு இதில் அக்கறையும், அவசரமும் பார்த்தீர்களா?

இப்படி சமூகநீதியின் அடித்தளத்தையே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு உடைத்து நொறுக்கி வருகிறது. சமூகநீதி போராளிகளே, ஒடுக்கப்பட்டோரே ஒன்று சேருங்கள்! உரிமைகளை நிலைநாட்ட, மீட்டெடுக்க வாரீர்! வாரீர்!!, என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details