தேர்தல் முடிவுகள் தொடர்பாக திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (23.5.2019) இரவு வரை அறிவிக்கப்பட்டன. எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூடுதல் இடங்களைப் பிரதமர் மோடி - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டு வகுத்த வியூகம், அவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு - இந்திய மாநிலங்களில் பெருத்த வெற்றியைத் தந்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த வெற்றிக்குப் பின்னே அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பதை எதிர்க்கட்சிகள், முற்போக்கு சக்திகள் உணரவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடத் தவறக்கூடாது.
இங்கே பெரியார் இல்லை, அண்ணா இல்லை, காமராஜர் இல்லை, கலைஞர் போன்ற அரசியல் முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் இல்லை. எனவே, உள்ளே ஊடுருவிவிடலாம் என்ற மதவாத பா.ஜ.க.வின் முயற்சியை படுதோல்வி அடையச் செய்து, தக்க பாடம் புகட்டிவிட்டனர் தமிழ்நாட்டு வாக்காளர்கள். அவர்களை எப்படி வாழ்த்துவது, பாராட்டுவது, நன்றி கூறுவது என்றே தெரியாத அளவுக்கு நாம் மகிழ்கிறோம்.