மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, எதிர்க்கட்சியினரது ஆதரவாளர்கள் கட்சியினரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா என மாநிலத்தில் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது மத்தியப்பிரதேச முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட முன்னாள் அலுவலர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதனை விமர்சித்து, முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
அதில், ‘எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமானவரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் !
எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்துமீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்’ என பதிவிட்டுள்ளார்.