கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, திருச்சி அருகே சமயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சரைக் குறித்துத் தெரிவித்த கருத்து, அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகத் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு தடை! - Interim ban
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தொடர்பான விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவது தொடர்பாகப் பேசியதாகவும், இதில் முதலமைச்சர் பெயருக்கு எவ்விதத்திலும் அவதூறு பரப்பும் வகையில் பேசவில்லை என்றும் இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, எவை எவை அவதூறு கருத்து, அவை எந்த அடிப்படையில் வரும் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளதால், அதன்பிறகே இதில் பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், மனுவுக்குத் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.