தமிழ்நாடு

tamil nadu

கடற்கரையோர கட்டடங்களின் பாதுகாப்பை ஆராய ஐஐடியில் புதிய மையம்

By

Published : Apr 15, 2019, 11:05 PM IST

சென்னை: கடற்கரை ஓரங்களில் உயரமான கட்டடங்களை கட்டுவதால் ஏற்படும் வெப்பத்தின் பாதிப்புகள் குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐஐடி

சென்னை ஐஐடி வளாகத்தில் டி.எஸ்.டி. ஆராய்ச்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் கரையோரக் கட்டமைப்புக்களில் பருவநிலை மாற்றத்தினால் உண்டாகக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அதற்கேற்ப மாற்றப்பட வேண்டிய யுக்திகள் குறித்தும் ஆராயும்.

மேலும், கடல் மட்டம் உயர்வது, அதிக வெப்ப மண்டலப் புயல்கள் வீசுவது போன்ற பருவநிலை மாற்றங்களின் பாதிப்புக்களைச் சமாளித்திட இந்தியாவின் 7,500 கி.மீ. நீளமுள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை ஆயத்தப்படுத்துவதிலும் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த மையத்தை இந்தோ-ஜெர்மன் பராமரிப்பு மையத்தின் ஆதரவில் ஏற்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில், தேசியக் கடலியல் தொழில்நுட்பக் கழகம், தேசியக் கரையோர ஆராய்ச்சி மையம், வானிலை ஆராய்ச்சி வட்டார மையம், ஐஎம்டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், சென்னை ஐஐடி ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், டி.எஸ்.டி. அலுவலர்களும் கலந்து கொண்டனர். கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும், இதில் தொடர்புள்ள இடர்கள் பற்றியும் ஆராய்ந்து, பொருத்தமான மாற்றங்களைச் செய்வது, பருவநிலை மாற்றங்களினாலும், கடல்மட்டம் உயர்வதாலும் உப்புநீர் உள்ளே நுழைவதாலும், பயனற்ற கழிவு மேலாண்மை முறைகளினாலும் நீர்வளங்களிலும், அவற்றின் தரத்திலும் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும் ஆராயப்பட உள்ளது.

சென்னை ஐஐடி கடல்சார் பொறியியல் துறையின் தலைவர் சன்னாசி ராஜ் கூறும்போது, ‘இம்மையம் கடல் வட்டாரத்தில் எதிர்காலத்தில் புவி வெப்பமடையும் சூழலையும், வெப்பமண்டலப் புயல்கள் எவ்வளவு தீவிரமாக ஏற்படும் என்பதையும், எத்தனை தடவைகள் ஏற்படும் என்பது குறித்தும், மிக அதிகமான மழைப்பொழிவுகள் நிகழ்வது பற்றியும் மதிப்பிட்டு முன் கணிப்புச் செய்யும் முறை குறித்து ஆய்வு செய்யும்.

மிக அதிகமான அலை எழுச்சிகளை மதிப்பீடு செய்து, அதன் விளைவாகக் கரையோரங்களிலும், கழிமுகப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றியும் ஆராயப்படும். கடலின் கழிமுகங்கள் வழியாக எந்த அளவுக்குப் புயல் நிலப்பகுதிக்குள் பாயும் என்பது பற்றி முன்கூட்டி கணிக்கப்படும்.

கரையோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் முக்கியத் தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்பு நிறுவனங்களைப் பருவநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு விதிகளை இந்த மையம் வகுத்து அளிக்கும். இது கூடிய சீக்கிரத்தில் கரையோரப் பகுதிகளில் அமைய இருக்கும் கட்டடங்களின் வடிவமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். இதனால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன்கள் விஞ்ஞான அணுகுமுறை மூலம் கவனத்தில் கொள்ளப்படும்‘ எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details