தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் 18ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ஆம் தேதியிலும் மது விற்பனை, தயாரிப்பு மற்றும் மது கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, மதுரை உள்ளிட்டப் பகுதிகளில் 128 கோடியே 33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 66 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 284 கோடி ரூபாய் மதிப்பிலான 989 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் அஞ்சல் வாக்குகள் அளிக்க அந்தந்த மாவட்டங்களில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக நான்காயிரத்து 282 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித் துறை சோதனை முடிவு பெற்றவுடன் தகவல்கள் கொடுக்கப்படும்.
நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆறாயிரத்து 772 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களது முக்கியப்பணியானது, பேலட் மெஷின்களை கொண்டு சேர்ப்பது, பின்னர் அவற்றை கண்காணித்து, ஏதேனும் பாதிப்பு என்றால் அதனை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவைகள் செய்ய வேண்டும்.
சென்னையில் அரசியல் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. காவல் துறையிடம் அது தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.