இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான அணுக்கழிவு மையம் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அணு உலைகள் அமைக்கப்படுவதால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களை கலவரப்படுத்தும் வகையிலான இந்த முடிவுக்கு கண்டனம் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் இரு அணு உலைகளை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மூன்றாவது, நான்காவது அணுமின் உலைகளை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி எரிபொருட்களை பாதுகாப்பாக வெகுதொலைவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் (Away From Reactor -AFR), பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் (Deep geological repository - DGR) அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம், விஜயபதி கிராமங்களில் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறிய அவர், அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காகத்தான் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல்,அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணுக்கழிவுகள் அணு உலை வளாகத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வைத்து குளிர்விக்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் அவை தற்காலிக அணுக்கழிவு மையத்திலும், பின்னர் நிரந்தர அணுக்கழிவு மையத்திற்கும் பாதுகாப்பான முறையில் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
2013ஆம் ஆண்டில் முதலாவது அணு உலை செயல்பாட்டுக்குவந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2018ஆம் ஆண்டிற்குள் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தற்காலிக மையம் அமைக்கப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டுக்குள் அதை அமைக்க அணுமின் கழகம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழ்நாட்டிலும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் தாக்கியபோது மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், அதற்கு காரணம் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுசக்திக் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாதது தான் எனவும் விளக்கியுள்ளார்.
கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, அப்பகுதியின் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமக்கு உள்ளதாக கூறியுள்ள அவர், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியதற்காக இரு வழக்குகளை சுமந்ததுடன், சிறைவாசமும் தான் அனுபவித்தை நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை தான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்காலிக, நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது என கூறியுள்ள ராமதாஸ், இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார்.