தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும்!’ - எச்சரிக்கும் கவுதமன்..! - gowthaman

சென்னை: தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வியல் பாதுகாப்பினை உறுதி செய்யக் கோரியும், அதற்கான சிறப்பு சட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தியும், முதலமைச்சர் தனிப்பிரிவில் இயக்குநர் கவுதமன் மனு அளித்துள்ளார்.

இயக்குநர் கவுதமன்

By

Published : Jun 27, 2019, 7:00 PM IST

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வியல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வண்ணம், புதியச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் இயக்குநரும், தமிழ் பேரரசுக் கட்சியின் நிறுவனத் தலைவருமான கௌதமன் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

‘தமிழ்நாட்டில் விவசாயம் இருக்கக் கூடாது என்ற முடிவுடன், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி கடலூர், நாகை, விழுப்புரம், ஆகிய இடங்களில் உள்ள நிலங்களையும் அழிப்பதற்கான திட்டம்தான் ஹைட்ரோகார்பன் - மீத்தேன் திட்டம். இத்திட்டத்திற்கு மாநில அரசும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு தருகிறது.

மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஒரு கோடி மக்கள் பாதிப்படைவார்கள். வல்லுநர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தை எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனம் டெல்டா மாவட்டங்களிலும், அதிக கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில், அதுதொடர்பாக மக்களிடம், எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்த வேண்டாம் என்று மத்திய அரசிடம் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதற்காக நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஸ்டெர்லைட் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிடப்பட உள்ளதாக, நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இதை அமைச்சர் கருப்பண்ணன் ஒப்புக்கொண்டுள்ளார். இது நிறைவேற்றப்பட்டால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழ்நாட்டையும் ஆளுகிறது என நிரூபணமாகிவிடும்’ என்று கூறினார்.

முடிவில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட இது பெரிய போராட்டமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன் தன் பேட்டியை நிறைவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details