தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலப்பதிகாரத்தை மக்களிடமும் கொண்டு சென்றவர் சிலம்பொலி: ராமதாஸ் - முதுபெரும் தமிழறிஞர்

சென்னை: தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளில் பல எண்ணற்றப் பணிகளை மேற்கொண்டார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் இரங்கல் கடிதம்

By

Published : Apr 6, 2019, 8:17 PM IST

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முதுபெரும் தமிழறிஞரும், சிலப்பதிகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவருமான முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கணித ஆசிரியராக பணியைத் தொடங்கினாலும் தமிழ் மொழி மீது கொண்ட பற்று காரணமாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப் பணி செய்தவர். அதுமட்டுமின்றி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் சேவை செய்தவர். தமிழ் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. அகவை 90-ஐ எட்டிய போதிலும் அவர் இலக்கியம், தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

அண்மையில் கூட 14 தொகுதிகளைக் கொண்ட ”செம்மொழித் தமிழ் அகப்பொருள் களஞ்சியம்” என்ற அவரது இலக்கியப் படைப்பு வெளியிடப்பட்டது. இளம் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் நூல்களுக்கு அணிந்துரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். அவை தொகுக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த திறனாய்வு நூல் என்ற விருதைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

என் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு அனைத்து வகையிலும் துணை நின்றவர். தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, பொங்கு தமிழ் வளர்ச்சி பண்ணிசை மணிமன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அண்மையில் கூட பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தாய்மொழி நாள் விழாவில் சிலம்பொலியாரை அழைத்து பெருமை செய்தேன். சிலம்பொலியாரின் மறைவு தமிழுக்காகப் போராடும் நல்ல நண்பரை, தமிழ் இலக்கியக் களஞ்சியத்தை இயற்கை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டது.

சிலம்பொலியாரின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details