தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை வராததால் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
வறண்டு கிடக்கும் சென்னையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி 2018ஆம் ஆண்டு பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதளத்திற்கே சென்றது. சென்னையில் கடைசியாக 2018 டிசம்பர் 6ஆம் தேதி பருவமழை மழை பெய்திருந்தது. கோடைகாலங்களில் வெப்பச்சலனம் காரணமாக பெய்யயும் மழையும் சென்னையில் பொய்த்துப் போனது. இதனால் மழையில்லா நாட்கள் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் இயங்கிவருபவர் பிரதீப் ஜான். 2015 பெருவெள்ளத்தின்போது இவரது செயல்பாடுகளை திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் அவரது சமூக வலைதளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சென்னையின் மழையின்றி 196 நாட்கள் ஆகியுள்ளன. சென்னையின் மழையில்லாத நாட்களின் சாதனை இன்று அல்லது நாளையுடன் முடிவடைய வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் இம்மாதம் பெய்யும் மழை குறைந்த அளவே இருக்கும் என்பதால் நிலத்தடி நீர் பெரிய அளவு உயர வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.