தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்.மாணிக்கவேல் விளம்பரத்திற்காக அதிகாரிகளை கைது செய்கிறார்: உயர்நீதிமன்றம் கண்டனம் - அறநிலையத்துறை

சென்னை: சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் விளம்பரத்திற்காக கைது செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Mar 29, 2019, 10:53 AM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் சுமார் 8.77 கிலோ தங்கம் முறைகேடாக அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக, தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஒன்பது பேரில் ஒருவர் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக தரப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கவிதாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கடந்த சில தினங்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்.மாணிக்கவேல் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் விளம்பரத்திற்காக கைது செய்வதாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஏ.எஸ் அதிகாரியை உரிய காரணம் தெரிவிக்காமல் கைது செய்தது விளம்பரத்திற்காகவே என்றுதான் கருத முடியும் என கருத்து தெரிவித்தார். சிலைக்கடத்தல் பிரிவு பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இனியாவது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு பழிவாங்கும் நோக்குடன், ஒரு தலைபட்சமாக செயல்படாது என நம்புவதாகவும் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீரசண்முகமணியை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details