நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என காங்கிரஸும், இத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பெரும் பின்னடைவு என பாஜகவும் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
குறிப்பாக, வட மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டிவருகின்றன. தென் மாநிலங்களை பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும் செல்வாக்கு இல்லை என்பதால் பிரதான கட்சிகளை நம்பியே காய் நகர்த்திவருகின்றன.
கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் இந்த இரு தேசிய கட்சிகளும் மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கின்றன.
இந்த நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9, புதுவையில் ஒன்றஉ என 10 தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
கன்னியாகுமரி தொகுதியின் சிட்டிங் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இவருக்கு கட்சிகளைக் கடந்து தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், இவருக்கே மீண்டும் பாஜக வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் வசந்த் குமாரை களமிறக்கியது. குமரி ஆனந்தனனின் சகோதரரான அவரால் அத்தொகுதியில் வெற்றி பெற முடியாமல் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அந்த தொகுதியில் யாரை களமிறக்குவது என காங்கிரஸ் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கையில் பாஜக சார்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்படுவார் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி, கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து போட்டியிட வலிமையான வேட்பாளரை பாஜக நிறுத்த வேண்டும். அதற்காக பாஜக ஹெச்.ராஜாவை களமிறக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு தொகுதிகளையும் ‘கை’ கைப்பற்றுமா அல்லது, தாமரை மலருமா என்பது அந்தந்த கட்சிகள் சார்ந்துள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவு வாக்குகளை பொறுத்தே அமையும் என்பதில் சந்தேகமில்லை.