திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்டு, சென்னை செங்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்த நாகராஜன்(28) ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்குக் காதல் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகுகின்றன. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாளிலிருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அவ்வப்போது தன் மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறி அவருடன் சண்டைபோட்டு வந்துள்ளார் நாகராஜன்.
இந்நிலையில் நேற்றிரவு சண்டை முற்றிய நிலையில், இவரின் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரின் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் பின்னர் நாகராஜனைக் காண இன்று காலை அவரின் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், நாகராஜன் காது, வாயில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.