நீட் மசோதா குறித்து சட்டப்பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, நீட் மசோதா தொடர்பாக அமைச்சர் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை என்றும், இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் திமுக கோரிக்கை வைத்தது. அப்போது, கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்ன செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதா 19 மாதங்களுக்கு முன்பாகவே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு மறைத்து, பேரவையில் உண்மை தகவலை கொடுக்க மறுத்திருக்கிறது’ என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு அதேபோல், ‘நீட் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என அவர் கூறவில்லை. இந்நிலையில், மத்திய அரசு மூலமாக தமிழ்நாடு அரசுக்கு வந்த கடிதத்தோடு இந்த பிரச்னையை பேரவையில் எழுப்பினேன்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், 19 மாதங்களுக்கு முன்னதாகவே நீட் மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. அப்போதே இதனை தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தால், உடனடியாக மீண்டும் ஒரு மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கலாம்.
தற்போது இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் சரியான பதிலை அமைச்சர் கூறவில்லை. எனவே நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்து தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்றும், இதனை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.