மழை பெய்தால் மட்டும் தான் தண்ணியா? ஆணையத்தின் மீது டிடிவி பாய்ச்சல்..!
சென்னை: மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்புக்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில முக்கிய புள்ளிகள் கீழ்வருமாறு;
- மழை பெய்தால் போதுமான தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு மேலாண்மை ஆணையம் எதற்கு? காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது, கர்நாடகா போனால் போகிறது என்று வழங்கும் தானம் அல்ல; தமிழகத்தின் உரிமை என அவருக்குத் தெரியாதா? வறட்சி கால நீர்ப்பகிர்வு முறையைச் செயல்படுத்தக் காவிரி ஆணையம் ஏன் முன் வரவில்லை? தமிழகத்தை இப்படி மாற்றாந்தாய் பிள்ளையைப் போல நடத்துவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?
- மேகதாது அணை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்காமல், ‘அதெல்லாம் உடனே நடந்துவிடக்கூடியதல்ல’ என்று மழுப்பலாக மசூத் ஹூசைன் கூறியிருக்கிறார். ஏனெனில் இதே மசூத் ஹூசைன் தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கக் கர்நாடகாவுக்கு அனுமதி அளித்தவர்.
- வேடிக்கை பார்க்காமல், சட்ட ரீதியாகச் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தின் வழியாகக் காவிரி நீரைப் பெறுவதற்குப் பழனிச்சாமி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை வலிமையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆதரவு பெற்ற கர்நாடக அரசு மேற்கொள்ளும் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையுடன் பேச வேண்டும்.