தமிழ்நாடு

tamil nadu

12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்: மறுமதிப்பீட்டிற்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

By

Published : Apr 16, 2019, 8:48 PM IST

சென்னை: 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலை மறுமதிப்பீட்டிற்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்என்று அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

State - 12th exam answer paper revaluation date announced

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்த பின்னர், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கான மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

12ஆம் வகுப்பு மார்ச் 2019 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள் சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் நடைபெறும்’ என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details