அரியலூர்: கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல நகரங்களின் மீது நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் மீண்டும் இந்தியா அழைத்து ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல கட்டங்களாக இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரேனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற அரியலூரின் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா எனும் மாணவியும் அங்கு சிக்கித் தவித்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பரில் உக்ரேனில் உள்ள ரூத்ருர் நேஷனல் யூனிவர்சிட்டியில் இணைந்து பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட கீர்த்தனா இன்று (மார்ச் 1) உக்ரேனில் இருந்து தனது சொந்த ஊரை வந்தடைந்தார். அப்போது பத்திரமாக வந்தடைந்த தனது மகளை வரவேற்கும் விதமாக, அவரது பெற்றோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.