நாடு முழுவதும் நேற்று விஜயதசமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கினால், அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்பது பெற்றோரின் கருத்து. குறிப்பாக விஜயதசமியன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும், அவர்களுக்கு வித்யாரம்பம் செய்வதும் வழக்கம்.
அதன்படி, அரியலூரில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்தனர். பள்ளிகளிலும் முதல் நாள் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நெல்மணிகளில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத கற்றுத்தரப்பட்டன.
இதேபோல் நெல்லையில் உள்ள சரஸ்வதி கோயில், நெல்லையப்பர் கோயில், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றுத் தங்களது குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்தனர்.