அரியலூர்: ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமப் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்தி, கொடியைத் தீ வைத்து எரித்தவர்களைக் கைது செய்யக்கோரி அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமப் பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பமும் உள்ளது. இதனுடைய நேற்று (டிச.06) அம்பேத்கர் நினைவு தினம் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த கொடியை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர்.
இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது, விசிக கொடி தீ வைத்துச் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் குவாகம் கடை வீதியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், விசிக சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த குவாகம் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விசிக நிர்வாகிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாகக் குவாகம்-கொடுக்கூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.. முதலமைச்சருடன் ஆலோசனை!