அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்குச் செல்ல கொள்ளிடம் ஆற்றங்கரையில் இறங்கி குறுக்கே நடந்து சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர், அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் மற்றும் இவரது உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம், வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர் தியாகராஜன் என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
பின்னர், துக்க நிகழ்ச்சி முடிந்து அண்ணங்காரன்பேட்டைக்குச் செல்வதற்காக குலோத்துங்கன், இளஞ்சேரன் மற்றும் அவர்களுடன் சிலர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, குறுக்கே நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் ஆகியோரை ஆற்றுத் தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் வந்தவர்கள் அவர்கள் இருவரையும் தேடியுள்ளனர்.