அரியலூர்: அரியலூர் இராஜாஜி நகர், கீரைக்கார தெருவில் வசிப்பவர் கொளஞ்சிநாதன். இவர் அரியலூரில் KFC (kentucky fried chicken) தொடங்குவதற்காக சபையர் ஃபுட்ஸ் (Sapphire foods website) என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் KFC கிளை தொடங்குவதற்காக NOC (No Objection Certificate), உரிமம் (Licence), பாதுகாப்பு வைப்புத் தொகை (Security Deposit Amount) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fees) என பல்வேறு காரணங்கள் கூறி, பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.66,20,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக, இணைய வழியில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.6,03,029 முடக்கம் செய்யப்பட்டு, வங்கி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாகத் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்புக் காவலர்கள் குழு அமைக்கப்பட்டது.