அரியலூர்:இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Goolge Link-ல் உள்ள விண்ணப்பத்தினை 10.02.2023–க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 04329 – 228641 / 9499055914 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்டோரியா கௌரி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைகோ