தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பாணியில் புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்த அரியலூர் ஆட்சியர்! - ariyalur news in tamil

புகையிலை பயன்படுத்திய இளைஞரை பிடித்து விசாரித்து அவர் வாங்கிய கடைக்கு உடனடியாக சீல் வைத்த அரியலூர் ஆட்சியரின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.

சினிமா பாணியில், புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்
சினிமா பாணியில், புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

By

Published : Dec 29, 2022, 1:48 PM IST

அரியலூர்: தா.பழூர் ஒன்றியம், சிலால், உதயநத்தம், கோடங்குடி, போன்ற கிராமங்களில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிலால் என்ற இடத்தில் ஆய்வை முடித்துவிட்டு ஆட்சியர் வாகனம் கோடங்குடி என்ற கிராமத்தை நோக்கி சென்றது.

அப்போது ஆட்சியர் வாகனம் என்பது தெரியாமல் ஒரு வாலிபர் கையில் புகையிலை பொட்டலத்தை வைத்துக் கொண்டு அதை பிரித்தபடியே சாலையை குறுக்கில் கடந்தார். இதை கவனித்த மாவட்ட ஆட்சியர், வாகனத்தை நிறுத்துமாறு கூறி, அந்த வாலிபரை அருகில் அழைத்து புகையிலை பொருளைச் சுட்டிக்காட்டி உனக்கு எங்கு கிடைத்தது என்று விசாரித்தார்.

அப்போது விசாரிப்பது மாவட்ட ஆட்சியர் என்பதை உணர்ந்த அந்த வாலிபர் பயந்து போய் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையை சுட்டிக் காட்டினார். அந்த வாலிபர் குறிப்பிட்ட கடைக்கு நேராக சென்ற ஆட்சியர் கடையில் திடீரென அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அந்த கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. கடையை பூட்டி சீல் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர் மேல் நடவடிக்கைகளையும் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் சாலையைக் கடந்த வாலிபரை அழைத்து, புகையிலை பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினார். தங்கள் கிராமத்தில் எங்காவது தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி புறப்பட்டு சென்றார். மாவட்ட ஆட்சியரே களத்தில் இறங்கி கடையை பூட்டி சீல் வைத்த விவகாரம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: எலி பேஸ்ட் விற்பனை செய்தால் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details