அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளான அரியலூர் நகரம், செந்துறை, திருமானூர் ஆகிய பகுதிகளில் உள்ள 32 வங்கிகளை கடந்த 16ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார்.
இது குறித்து முன் அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் திடீரென வங்கிகள் மூடப்பட்டதால் கிராமங்களில் இருந்து வங்கிகளுக்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் அரியலூர் நகரில் உள்ள வங்கிகள் எவ்விதி அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டன. நகரில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்தவர்கள் அளித்த தகவிலின் பேரில் வங்கிகள் திறக்கப்பட்டதை அறிந்து கிராம மக்கள் பணம் எடுக்க வங்கிகளுச்கு சென்றுள்ளனர்.
ஆனால், வங்கிகளில் அரசு அலுவலகங்கள், வணிகர்கள், நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணம் வழங்கப்படும் மற்றவர்கள் பணம் எடுக்கமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
சில வங்கிகளில் ஏடிஎம் கார்டுகள் உள்ளவர்களுக்கு மட்டும் பணம் தரப்படும் என்று கூறியுள்ளனர். வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டு வந்தவர்கள் பணம் எடுக்கமுடியாமல் திரும்பினர். நாளை முதல் வங்கிகள் மீண்டும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று அலுவலர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பின்றி திறக்கப்பட்ட வங்கிகள் அரியலூர் நகரில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வங்கிகளை மூடியும், திறந்தும் வருவதால் பணம் எடுக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களை அலையவிடாமல் வங்கி அலுவலர்கள் வங்கிகளின் நிலையை முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: நடமாடும் வங்கியை அமைத்துத் தர பொது மக்கள் கோரிக்கை