அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (19). இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.9) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிணற்றிலிருந்து மாணவனின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இருப்பினும் மாணவனை இழந்த பெற்றோர் உடற்கூறாய்வு செய்ய விடாமல், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொது மக்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.