அரியலூர்: தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. பொதுக்கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் இந்த பொதுக் கணக்குக்குழு ஆய்வில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக் கணக்குக்குழுவினர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவ மாணவர்கள் பயிலும் ஆய்வகம், பரிசோதனைக் கூடம், வகுப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் தொடர்பான பயிற்சிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும், மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் மருத்துவப் படிப்பு குறித்து கேட்டறிந்து கல்லூரி வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளிடம் விடுதியில் உள்ள உணவின் தரம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து அரியலூர் அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு மாணவர்கள் தங்கும் இடத்தினை ஆய்வு செய்து விடுதியை முறையாக பராமரிக்கவும், விடுதியில் பழம்பெரும் தலைவர்கள் புகைப்படங்களை வைக்கவும், வளாகத்தில் நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வளாகத்தை பசுமையாக பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அரியலூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு சமையல் அறை, பொருட்கள் வைப்பறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் மாணவர்களுக்கு தரமாக உணவினை சமைத்து வழங்கவும், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை பொருட்களான போர்வை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து வாரணவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாயவிலைக் கடையினைப் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் அங்குள்ள தானிய ஈட்டுக் கிடங்கினையும் பார்வையிட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமோஸைட், கனிமத் தாது, கனிமங்கள், புதைபடிமங்கள் உள்ளிட்ட பல்வேறு தொன்மைக் காலப் பொருட்களை ஆய்வு செய்ததுடன் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த கல்லூரி மாணவிகளிடம் அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அருங்காட்சியகம் குறித்த காணொலி ஒன்று தயாரிக்கவும் அறிவுறுத்தினர்.
கீழப்பழுவூரில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.