சென்னை:நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டும், பள்ளிகள் திறக்கப்பட்டும் வருகிறன.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது, தேர்வுகள் நடத்தப்பட்டும் வந்தது.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
இந்நிலையில் தற்போது கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டும், அதே சமயம் பள்ளிகள் திறக்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர், தொடக்கப் பள்ளிகள் திறப்பு குறித்து, செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்தது. அதன் படி இன்று (நவ.1) 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கரோனாவால் சுமார் 600 நாள்களுக்குப் பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
600 நாள்கள் கழித்து பள்ளி நடவடிக்கைகள்
நீண்ட நாள்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால் மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை எனவும், பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்’ - முதலமைச்சர்