அரியலூர் மாவட்டம், சிறுவளூரில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியானது 1954ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 10ஆம் வகுப்பில் 34 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி ஊர் பொது மக்களால் வழங்கப்படடு வருகிறது.
இந்தப் பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். இவர்கள் காலை பள்ளிக்கு வந்து மாலை வரை படிக்கும்போது சோர்வு அடைந்து மாலையில் எடுக்கப்படும் சிறப்பு வகுப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. இவர்கள் சோர்வடையாமல் இருக்க அப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து இப்பள்ளி மாணவர்களுக்கு மாலையில் உணவளிக்க திட்டமிட்டனர்.
இதனைத் தொடந்து ஊர்பொதுமக்கள் தினமும் மாலை மாணவர்களுக்கு சிறுதானிய உணவுகளான குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, திணை, எள்ளுருண்டை போன்ற உணவுகளை சமைத்து அவர்களுக்கு வழங்கினர். இந்த சிறுதானிய உணவினை மாணவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் உடல் நலன் மேம்படுவதுடன், ஞாபகத்திறனும் அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே மக்கள் மாணவர்களுக்கு இது போன்ற சிறு தானிய உணவுகளை மாலை நேரம் வழங்கி வருகின்றனர்.