புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். இது நடைபெற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் அவரது மனைவி காந்திமதிக்கு சிவச்சந்திரன் வீரமணத்திற்குப் பிறகு சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலராகப் பணி கிடைத்த நிலையில், பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன.
தன்னுடைய கணவர் வீரமரணம் அடைந்து ஓா் ஆண்டு ஆன நிலையில் தன் குழந்தைகள் நம்முடைய அப்பா எங்கே எனக் கேட்கும்போது தன்னால் பதில் கூற முடியவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார். இருந்தாலும் தன்னுடைய மகனை பெரியவனான பிறகு ராணுவ பணிக்கு அனுப்புவேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், பிப்ரவரி 14ஆம் தேதியைக் காதலர் தினமாகக் கொண்டாடுவது தவிர்த்து நாட்டிற்காக சென்று வீர மரணம் அடைந்த சிவச்சந்திரன் உள்ளிட்ட 44 சிஆர்பிஎப் வீரர்களை நினைவுகூரும் விதமாக அவர்களுடைய வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்த தினத்தை ராணுவ வீரர்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் வீர மரணம் அடைந்த இரண்டு சிஆர்பிஎப் வீரர்களுக்கும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். அந்த சிலையை பார்க்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒரு ராணுவ வீரனாக வர வேண்டும் என தூண்டும் விதமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு விற்பனை -மணல் லாரி உரிமையாளர்கள் மனு!