அரியலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் 14ஆம் தேதி போகிப் பண்டிகையும், 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ஆம் தேதி திருவள்ளுவர் திருநாளும், 17ஆம் தேதி காணும் பொங்கல் என்றும் பண்டிகை கொண்டாடும் தேதிகள் மாறி உள்ளன.
இவ்வாறு மாற காரணம் என்ன என்று ஜோதிட வல்லுநர்களை கேட்டபோது அவர்கள் கூறியதாவது, 'பண்டைய தமிழ் பஞ்சாங்க கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும்போது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் தனுசு ராசியில் இருந்து சூரியன் 20 நிமிடங்கள் தாமதமாக மகர ராசிக்குள் பிரவேசிக்கிறது.
அதேபோல 72 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சியின் அடிப்படையில் சூரியன் ஒருநாள் தாமதமாக மகர ராசியில் பிரவேசிக்கும். இவ்வாறான கிரக தாமதங்களால் தான் இந்த ஆண்டு பொங்கல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1862ஆம் ஆண்டு முதல் 1934ஆம் ஆண்டு வரை பொங்கல் பண்டிகையானது ஜனவரி 13ஆம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது.
கடந்த 1935ஆம் ஆண்டு முதல் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது சூரிய கிரக தாமதத்தால் ஜனவரி 15இல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலை வரும் 2080ஆம் ஆண்டு வரை தொடரும். 2081ஆம் ஆண்டு முதல் அடுத்த 72 ஆண்டுகளுக்குப்பின், ஜனவரி 16இல் தான் பொங்கல் பண்டிகை நடைபெறும். இந்த நிலை 2153 வரை நீடிக்கும். கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள், சுழற்சிகள் காரணமாக பண்டிகைகள் நிர்ணயிக்கப்படும் தேதியிலும் மாற்றங்கள் இருக்கும்’ என ஜோதிடர்கள் கருத்து கூறினர்.
இதையும் படிங்க: அறுவடை இயந்திரத்திற்கு வாடகை நிர்ணயம் - அரியலூர் கலெக்டர் அறிவிப்பு