அரியலூர்: பிளாஸ்டிக் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான பொருள். மக்களால் அதிகபட்சம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் புவிக்கு பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில நிமிடங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் காலம் எடுத்தாலும், அவை மட்குவதில்லை.
இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் தங்குவதால் மழை நீர் உறிஞ்சுவதில் சிக்கல் உள்ளது. ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதால் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சுப் புகைகளாலும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மனித சமுதாயத்திற்கு கேடு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இது குறித்து ஐ.நா. சபை கவலை வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையானது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் சில திருத்த விதிகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. அதனடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.
அதே உத்தரவு தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன, குறையவில்லை என்பது நாளுக்கு நாள் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் நிரூபணம் ஆகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் முதல் 30,000 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருமாநகராட்சிகளை தவிர, இதர நகராட்சிகளில் ஆண்டொன்றுக்கு 117 முதல் 135 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் ஆகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாவதால் மத்திய அரசு இது குறித்த விதிமுறைகளை சற்று கடுமையாக மாற்றியது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கு தடை விதித்தது.
பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மாநில அரசுகள் தங்கள் எல்லைகளில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டின. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தவிர்ப்பது, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், கேரி பேக்குகள் இதர பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களின் நடமாட்டத்தை அரசுகளால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமையல் எண்ணெய், பால், ஸ்வீட் மற்றும் காரம், சோப்பு வகைகள், மிட்டாய் சாக்லேட் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் போன்றவையும் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. சட்ட விதிகளில் உள்ள சந்துகளை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள் குறுக்கு வழியில் பிளாஸ்டிக்கை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது மிகவும் கெடுபிடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், நாளடைவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதனால் மிக சரளமாக எல்லா கடைகளிலும் கேரிபேக் உள்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் மக்களுக்கு மிக எளிதாக கிடைத்து வருகின்றன.