அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை என்எச்-45சி யில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏற்கனவே இடம் அளக்கப்பட்டு, இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகையும் அந்த நிலத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்த சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் லாரி நிறுத்துமிடம் புதிதாக அமைக்கப்பட போவதாகவும், மீண்டும் இடம் அளந்து கையகப்படுத்த போவதாகவும் பொதுமக்களிடத்தில் தகவல் பரவியது. இதனால் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் நியாயம் கேட்டு திடீரென சாலை அமைக்கும் அலுவலகம் முன்பாக அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் வந்து உரிய விளக்கம் தந்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.