அரியலூர்: தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை அமர்வு நீதிபதியுமான மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய நீதிபதி மகாலட்சுமி, “கிராம ஊராட்சிகளின் தேவைகளை கிராம மக்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள விரும்புவதில்லை.
கிராமங்களில் உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களது தேவைகளைப் பேசி தீர்த்துக் கொள்வதற்குத்தான் அப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கிராம மக்கள் ஒருவேளை கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டாலும், அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளைப் பேசுகிறார்களே தவிர, பொது பிரச்னைகளைப் பேசுவதில்லை.
ஒருவேளை கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் பொதுப் பிரச்னைகள் பேசப்பட்டு அதற்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், இதுபோன்ற சட்டப் பணிகள் குழு போன்ற அமைப்புகளை அணுகி, உங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம். மக்கள் சட்டப்பூர்வமாக தங்களது பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு கோர்ட்டுக்கு அலைவதற்கு பயந்து பிரச்னைகளுடன் வாழப் பழகி கொள்கின்றனர்.