தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காய விலை ஏற்றம்: தேர்தலில் பிரதிபலிக்குமா? - வெங்காய விலை தேர்தல்

சாம்பார், கூட்டு, பொறியல் என வெங்காயம் இல்லாத சமையல் இல்லை. வெங்காயத்தை உரிக்கும் போது கண்ணீர் வரும், அதேபோல் வெங்காய விலை உயர்வைக் கண்டு இல்லத்தரசிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒருபுறம் வெங்காய விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் வேதனையில் ஆழ்ந்திருக்க, மறுபுறம் தொடர் மழையால் வெங்காயம் அழுகி, அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

onion
onion

By

Published : Mar 6, 2021, 6:39 PM IST

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர், செட்டிகுளம், சத்திரமனை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான், அதிகளவில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. 60 நாள் முதல் 90 நாள் வரை பயிரிடப்பட்டு, பின்னர் அறுவடை செய்யப்படுகிறது.

இதனிடையே அண்மையில் புயல், மழை காரணமாக சின்ன வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வேர் அழுகல் நோய்ப் பாதிப்புக் காரணமாக, சாகுபடி செய்யப்பட்ட வெங்காயத்தை டிராக்டர் மூலம் வயலிலேயே அழித்ததாகவும் அவர்கள் கூறினர்.

பெரம்பலூர் மட்டுமின்றி கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் வலியுறுத்தல்

விதைக்கக்கூட விவசாயிகள் கையில் வெங்காயம் இல்லை. ஆனால், அதன் விலை கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொறுப்பாளர் செல்லத்துரை தெரிவத்துள்ளார். குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

வெங்காயத்தை அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கியது தவறு என்றும், அதனை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்தால் மட்டுமே, விலை கட்டுக்குள் இருக்கும் என்றும் செல்லத்துரை கூறினார்.

'அத்தியாவசியப் பொருளாக சின்ன வெங்காயத்தை அறிவிக்க வேண்டும்'

வெங்காயம் வரத்துக் குறையும்போது, விலை உயர்வு சகஜம். சில நேரங்களில் பதுக்கல் காரணமாகவும் விலை அதிகரிக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் அறுவடை நேரத்தில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

'பாதுகாப்பு கிட்டங்கிகளை அரசு ஏற்படுத்தித்தரவேண்டும்'

அத்தியாவசியத் தேவையான வெங்காயத்தை பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கொண்டு சேர்ப்பது அரசின் கடமை. அதேபோல் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலையைப் பெற்றுத்தரவேண்டியதும் அரசின் பொறுப்பு. இரண்டையும் சமன்படுத்தி எந்த தரப்பிற்கும் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக வெங்காய விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகளும், அறுவடை பொய்த்துப்போனதால் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், விலை உயர்வதும் குறைவதும் தொடர்கிறது. வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக சில அரசுகள் ஆட்சியை இழந்திருக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெங்காயப் பிரச்னை எதிரொலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்...

ABOUT THE AUTHOR

...view details