அரியலூர்:வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில் "நான் முதல்வன் திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரியலூரில் இன்று (மார்ச்.18) நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்பு முகாம்கள்:இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணியமர்வு உத்தரவுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தனித்துவமான முயற்சி: இதன் மூலம் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, இளைஞர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் ஆனது வேலை கொடுப்பவர் மற்றும் வேலை தேடுபவர்களை ஒரு குடையின்கீழ் இணைக்க தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும்.
இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். வட்டார அளவில் ஏற்கனவே, நடைபெற்ற பணி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றவர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் வேலைவாய்ப்பு வேண்டி 1410-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் 149 இளைஞர்கள் தனியார் துறைகளில் பணிக்கு செய்ய தேர்வாகி உள்ளனர். இதில் 65 இளைஞர்களுக்கு இன்று நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வு நடைபெற்ற பின் ஆணை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் சிவசங்கர், 'தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அலுவல் பணிகளுக்கிடையே நம்முடைய அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாக கூறினார. குறிப்பாக, எதிர்கால தலைமுறையின் கல்வியினை வலுப்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளிகளை மேம்பாடு செய்யும் வகையில் ரூ.7500 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்திருப்பதாக தெரிவித்தார்.