அரியலூர்:ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி இளைஞர்களை அரசியல் ரீதியாக ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் 'இளையோர் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் அரசு உதவியுடன் கல்லூரிகளில் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இளையோர் பாராளுமன்றம் - 2023க்கான நிகழ்ச்சி அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற்று அமைச்சர் பேசியதாவது, ”நம்முடைய வாழ்க்கை ஒரு மனிதனின் வாழ்க்கையை போல நம்முடன் மட்டும் முடிந்துவிடாமல் நம்முடைய சமுதாயத்திற்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு யுவ கேந்திரா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இளைஞர்களை இணைத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது” என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், ''தாய்மொழியை பாதுகாக்க போரிட்டவர்கள் நமது தமிழர்கள் என்பதனால் பேசும் மொழி நமது அடையாளம் ஆகும். எனவே, நமது அடையாளத்தை இழக்கக்கூடாது. நமது மொழியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'' என்று மாணவர்களிடையே வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நீட் குறித்து தமிழக அரசு மற்றும் ஏழை எளிய மக்களின் எதிர்ப்பைப் முன்வைத்தும் பேசினார். பின்னர் பேசிய அமைச்சர், ”இந்தியா முழுவதும் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை 50% உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை தவிர்த்துப் பிற மாநிலங்களில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 25%ஆக உள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் செயல்படுத்தாத போதிலும் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52%ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.