அரியலூர் மாவட்டம் வாரணாசியருகே நல்லூர் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கினால், கோயில்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு அனுமதி தரவில்லை. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு நிச்சயக்கப்பட்ட திருமணங்களை எளிமையான முறையில் நடத்துவதற்கு மட்டும் அரசு அனுமதியளித்தது. இதனால், மல்லிகை பூவுக்கான மவுசு குறைந்தது.
மேலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களும் நடத்தப்படவில்லை. இதனால், மல்லிகைக்கு பூவுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. கடந்தாண்டு மே மாதம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இந்தாண்டு 70 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இதனால், விவசாயிகள் பூ பறிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும், மல்லிகை செடிகளை பராமரிக்க முடியாமலும் திணறிவருகின்றனர். சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலைதான் இதுவென்றால், பூவை பறிக்கும் கூலித் தொழிலாளர்களின் நிலையும் மோசமாகத்தான் உள்ளது.
ஊரடங்கால் மல்லிகைக்கு மவுசு குறைந்தது: நிவாரணம் கோரும் விவசாயிகள் மல்லிகை பூவுக்கு உரிய விலையில்லாததால் கூலித் தொழிலாளர்களுக்கு 40 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் வேறு எந்த பணிக்கும் செல்ல இயலாததால், கூலித் தொழிலாளர்கள் இந்த 40 ரூபாய் கூலியைப் பெற்றுக்கொண்டு பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயல்பு நிலை திரும்பும் போது பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பதாக கூலித் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மல்லிகைப் பூ மணம் விசுவது போல் விவசாயிகளின் வாழ்க்கையிலும் மணம் வீச தங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மல்லிகை பூவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:செடியிலேயே பாழாகும் மல்லிகைப் பூக்கள்: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!