அரியலூர்: தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதைக் கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ரமேஷ் சந்த் மீனா, அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
இந்த ஆய்வில், அரியலூர் நகராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட பணியினை பார்வையிட்டு, குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அஸ்தினாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். மேலும், பொய்யூர் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
மேலக்கருப்பூரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.31.48 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் இல்லாத குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகள் தொடங்கிய காலம், கட்டுமானப் பொருட்களின் தரம், பணி முடிவடையும் காலம் உள்ளிட்டப் பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து விரைவாகப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கருப்பிலாக்கட்டளையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.43,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்டு, விவசாயிகளிடம் வேளாண் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.